.
எனதறைக்கு பக்கத்தறை
அவள் படுக்கையறை
நித்தமும் இரவு முணுமுணுப்பாள்
ஏதாவதொன்றை
அவள் கண்ட கனவை
காலம் கடந்து விட்டதை
சமைக்க இயலாததை
வாழ்வில் வராததை
ஏற்றதை ஏற்காததை
உடம்பின் வலிகளை
இதனுடன்
என் இரவு கண்விழிப்பை
நித்தம் என்னை அழைத்து
'பகலில் படி கண்கெட்டுவிடும்" என்பாள்.
அவள் குரல் கேட்டு
பின் நகர்ந்து செல்லும் என் இரவு
அவள் குரலில்லை யென்றாள்
எனக்கிரவில்லை
ஆதலால்
அம்மா இறக்கக் கூடாதென
நித்தம் ஏங்குகிறேன்.
.
.
.