Monday, February 22, 2010

ப்ளாக்கர் உலகமும் -பழகா நட்பும் .

ஜெகநாதன் has left a new comment on your post "நம்மில் நாம் பிறப்போம் ,வாழ்வை வசந்தமாக்குவோம்.":

நண்டு@நொரண்டுதான், நான் தேடிக்​கொண்டிருந்த​டோமி என்று தெரியாமல் போயிற்று.
3 வரிகள் மட்டும் எழுதும் ​டோமியிடமிருந்து இப்படி வித்யாசமான ​செறிவான ​சிந்தனைகளைப் படிக்க சுவாரஸியமா இருக்கு!

தொடர்ந்து நடப்போம்!



Posted by ஜெகநாதன் to நண்டு @ நொரண்டு at February 22, 2010 6:56 AM


இதைப்படித்ததும் எனக்கு கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் கொண்ட உணர்ச்சி ஒத்த நட்பு தான் கண்முன் காட்சியானது .

பாண்டிய நாட்டில் பண்டைக்காலத்தில் பிசிராந்தையார் என்ற அருந்தமிழ்ப்புலவர் வாழ்ந்துவந்தார் .அப்புலவர் சான்றாண்மைப் பண்புகள் ஒருங்கமைந்த ஆன்றோராக விளங்கினார் .பிசிராந்தையார் பாண்டிய நாட்டில் வாழ்ந்த காலத்தே சோழவள நாட்டை கோப்பெருஞ்சோழன் என்பவர் ஆண்டு வந்தார் .அவர் தமிழில் பெரும் புலமையுடையவர் .'புல மிக்கவரை புலமை தெரிதல் புலம் மிக்கவர்க்கே புலனாம்' என்பது பழமொழி .சோழனுடைய தமிழ்ப்பற்றினால் புலவர் பெருமக்கள் அவர் அன்பிற்குறிய நண்பர்களாய் அல்லும் பகலும் அவரை விட்டகலாது அவர் உடன் உறைந்தனர் . பாண்டிய நாட்டுப் பைந்தமிழ் புலவர்களின் வாயிலாக பிசிராந்தையாரின் பெருமையை அறிந்தார் கோப்பெருஞ்சோழன் .அவரைக்கண்டு அளாவளாவ்வேண்டும் என்ற வேட்கை சோழனுக்கு உண்டாயிற்று .அது பின்னர் சோழனின் உள்ளத்தில் பெருநட்பாய் மலர்ந்து மணம் வீசலாயிற்று .

கோப்பெருஞ்சோழன் வாழ்வில் ஏற்பட்ட ஒரு துன்ப நிகழ்ச்சியால் ஏற்பட்டவிருந்த பெரிய மானக்குறையை தவிர்க்க ,மானம் இழந்து உயிர் வாழ விரும்பாத சோழன் தனது ஆட்சிப்பொறுப்பைத் துறந்து இழிவைப்போக்கிக்கொள்ள வடக்கிருந்து உயிர் விடத் துணிந்தார் .காவிரியாற்றங்கரையில் வடக்கிருக்க இடங்கள் வகுக்கப்பட்டன.அப்போது சோழன்,'பிசிராந்தையார் என் ஆருயிர் நண்பர் .அவரும் என்னுடன் வடக்கிருக்க வருவார் .அவருக்கு எனக்குப் பக்கத்தில் இடம் ஒதுக்கி வைக்கவும் ' என ஆணையிட்டான் .அதுகேட்ட ஏனைய புலவர்கள் வியப்புற்று ,'அரசே! பாண்டி நாடு தொலைவில் உள்ளதே .பிசிராந்தையாரை தாங்கள் ஒருமுறைகூடக் கண்டதும் இல்லை;பழகியதும் இல்லையே! நீங்கள் இருவரும் கேள்வியளவிலேயே நட்புக்கொண்டீர் .அவ்வாறு இருக்க எவ்வாறு வருவார்?' என ஐயமுற்று உரைத்தனர் .அதுகேட்ட சோழன் 'புலவர் பெருமக்களே ! ஐயம் வேண்டாம் .நாங்கள் கேள்வியளவிலேயே நட்புக்கொண்டாலும் எங்கள் நட்பு மிகவும் உறுதியானது.நிச்சயமாக வருவார்.ஆதலால் அவருக்கு ஓர் இடம் ஏற்படுத்துங்கள்,'என்று கூறிக்கொண்டிருக்கும் போதே பிசிராந்தையார் அவர்கள் முன் வந்து நின்றார் .அது கண்டு அனைவரும் திகைத்து நின்றனர் .மன்னர் உரைத்த உரை பழுதாகாமல் அங்கு சேர்ந்தபிசிராந்தையாரின் உணர்ச்சி ஒத்த நட்பின் திறத்தினை பலவாறு பாராட்டினர் .

இதனை கண்ணகனார் என்னும் புலவர்

' பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்
இடைபடச் சேய ஆயினும் தொடைபுணர்ந்து
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
ஒருவழித் தோன்றியாங் கென்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப
சாலார் சாலார் பாலர் ஆகுபவே ' -

என்ற அழகிய செந்தமிழ்ப்பாடலைப் பாடி அவர்கள் நட்பின் பெருமையை பாராட்டினார் .

கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் கொண்ட உணர்ச்சி ஒத்த நட்புரிமையே தமிழகத்தில் நட்புக்கு இலக்கியமாக போற்றப்பட்டு வருகின்றது .

இதனை நான் கல்லுரி்களில் பயின்ற காலத்தே இப்படியெல்லாம் இருந்திருக்கமுடியுமா என ஐயுற்றேன் .புலவர்களின் பொய்யுரைகளில் இதுவும் ஒன்று என நகைத்ததும் உண்டு .ஆனால் ,அதற்கு மாறாக புலவர்கள் உரை என்றும் பழுதாகாது என்பதனை நான் ப்ளாக் ஆரம்பித்த பிறகு காலம் உணர்த்தியது .

அப்படி எனக்கு உணர்த்திய ஒன்றைத்தான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் படித்தது .

நான் 'அட்டக்கத்தி 'என்ற எனது மற்றொரு ப்ளாக்கில் 'டோமி 'என்ற பெயரில் 'கவிதைபாடும் நேரம் 'என்று சிற்பாக்கள் வடித்துவந்தேன் .அதில் அவருக்கும் எனக்கும் நட்பு ஏற்பட்டது .
சிற்பா என்றால் ,இது தமிழ்க்கவிதை வடிவில் ஒரு வகை
- எளிமையான கவிதை நடை
- மூவடி
- "தத்துவம்",'உணர்ச்சி", சார்ந்தது
- இலக்கணம் தவிர்த்தது
- இயல்பானது
- இயற்கை யானது.

உதாரணத்திற்கு

'அறிய முடியாது
குருடர்களால்
அழகிய மே மரப்பூக்கள் '

இதற்கு பல அர்த்தங்கள் .
அப்படித்தான் வடிவமைக்கடுவது சிற்பா .
ஒரு சில .
முதலாவதாக நேரடியான பொருள் நேரடியாகவே உள்ளது .
2வதாக ப்ராய்டு, 'குருடர்களால் சிவப்பு நிறத்தை அறிய முடியாது ' என்பார் .அது இதில் உணர்த்தப்பட்டுள்ளது .
3வதாக மே பூக்கள் சிவப்பு நிறத்தது எனில் கம்யூனிம் அதன் குறியிடாக , அறிவற்ற மனிதர்களால் கம்யூனிசத்தைப்பார்க்க முடியாது .அவர்கள் குருடர்களே ....
இப்படி அடுக்கிக்கொட்டே போகலாம் அவரவர் ....
இப்படியாக நான் சிற்பாக்கள் வடித்துவந்தபொழுதுகளில்
ஜெகநாதன் ,முனியப்பன் பக்கங்கள் ,மற்றும் பேராசிரியர் குணசேகரன் ஆகியோர் நண்பர்களானவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் .
அட்டக்கத்தியில் இவர்கள் என்றால்
நண்டு@நொரண்டில் vimalavidya ,பழமைபேசி,
பேராசிரியர் எம்.ஏ.சுசீலா அம்மா அவர்கள் goma,cheena (சீனா) ,
Starjan ( ஸ்டார்ஜன் ) ,அண்ணாமலையான்,நேசமித்ரன்,துபாய் ராஜா ,
Maximum India ,Prince Ennares Periyar,செல்வ ராயன் ,veeraa,லோகு ,
நட்புடன் ஜமால் ,தேவன் மாயம் ,பேநா மூடி,பிரியமுடன்...வசந்த் ,
கட்டபொம்மன் ,க.பாலாசி ,வித்யாசாகர் ,அகல்விளக்கு ,
பிரியமுடன் பிரபு ,V.A.S.SANGAR மற்றும் benzaloy ஆகியோர் நண்பர்களானவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் .
இவர்கள் அனைவரும் எனது பழகா நண்பர்கள் . இவர்களுடனான எனது நட்பு பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழனும் கொண்ட உணர்ச்சி ஒத்த பழகா நட்புக்கு இணையானது .இவர்கள் அனைவரும் எனக்கு கோப்பெருஞ்சோழன் ஆவார்கள் .




.


.


.

.