.
எங்கள் தாய் நாட்டைச் சுட்டெரியுங்கள்
எங்கள் கனவுகளைப் பொசுக்கி சாம்பலாக்குங்கள்
எங்கள் கவிதைகளை அமிலத்தில் மூழ்கடியுங்கள்
எங்கள் சகோதரர்களைப் படுகொலை செய்து
அவர்களின் ரத்தச் சுவடுகளை
மண் தூவி மறையுங்கள்.
எமக்குச் சொந்தமான அனைத்தையும் ,
எமது சுதந்திரமான இயற்கையை
எங்கள் மண்ணின் தொன்மை மரபுகளை,
உங்கள் அதிநவீனத் தொழில் நுட்பங்களால்
வாயடைத்து...குரல்வளை நெறித்துக்
கொல்லுங்கள்.
அழியுங்கள்...அழியுங்கள்.
எங்கள் புல்வெளிகளை
எங்கள் வளமண்ணை
அழியுங்கள்
எங்கள் வயல்வெளிகளை
எங்கள் கிராமங்களை
எங்கள் முதாதையர் கட்டிய வீடுகளை
எங்கள் காவியங்களை
எங்கள் தொன்மை மரபு விதிகளை
எல்லாம் தரையோடு தரையாக
நசுக்கி அழியுங்கள்.
எங்கள் பச்சை மரங்களை
எங்கள் சமத்துவ வாழ்வை
எங்கள் ஒத்திசைந்த மரபை
அழியுங்கள்...அழியுங்கள்.
உங்கள் குண்டு மழையால்
எங்கள் பள்ளத்தாக்குகளை நிரவுங்கள்
உங்கள் கட்டளைகளால்
எங்கள் கடந்த கால நினைவுகளை
எங்கள் இதிகாச பெருமைகளை
எங்கள் இலக்கிய உவமைகளை
எல்லாம் தரைமட்டமாக்கி அழியுங்கள் .
எங்கள் சோலைகளை
எங்கள் பூமியை
ஒரு புழு பூச்சியின்றி
ஒரு பறவை...ஒரு வார்த்தையுமின்றி
ஒண்டி ஒளியவும் இடமின்றி
அழித்துச் சாம்பலாக்கித் துடைத் தெறியுங்கள்.
இன்னும் என்னவெல்லாம் முடியுமோ
அத்தனை கொடுமைகளையும்
செய்து முடியுங்கள்
ஆனால்...
உங்கள் அராஜகம் என்னை அச்சுறுத்திவிடாது .
நான் ஒரு போதும் சோர்ந்து விழப் போவதில்லை
என் இறுகி மூடிய கைகளுக்குள்
ஒரு விதை ...ஒரு சின்னஞ்சிறு உயிர் வித்து
அதை நான் பத்திரமாகக் காத்து வைத்துள்ளேன் .
அதை எம் மண்ணில் மீண்டும் விதைப்பேன்
அதுவே என் நம்பிக்கை .
===========
பெயர் தெரியாத ஒரு பாலஸ்தீனியனின் உணர்வுகளின் சாரம் .
===========
நன்றி வழக்கறிஞர் U.K.S & நன்றி டாக்டர் ஜீவா .
===========
.
.
.
.
.